2 இராஜாக்கள் 25 : 1 (TOV)
அவன் ராஜ்யபாரம்பண்ணும் ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிரே பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள்.
2 இராஜாக்கள் 25 : 2 (TOV)
அப்படியே சிதேக்கியா ராஜாவின் பதினோராம் வருஷமட்டும் நகரம் முற்றிக்கை போடப்பட்டிருந்தது.
2 இராஜாக்கள் 25 : 3 (TOV)
நாலாம் மாதம் ஒன்பதாந்தேதியிலே பஞ்சம் நகரத்திலே அதிகரித்து, தேசத்தின் ஜனத்திற்கு ஆகாரம் இல்லாமற்போயிற்று; நகரத்தின் மதிலில் திறப்பு கண்டது.
2 இராஜாக்கள் 25 : 4 (TOV)
அப்பொழுது கல்தேயர் நகரத்தைச் சூழ்ந்திருக்கையில், யுத்தமனுஷர் எல்லாரும் இராத்திரிகாலத்தில் ராஜாவுடைய தோட்டத்தின் வழியாய் இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் தப்பி, அவர்களும் ராஜாவுமாய் சமனான பூமியை நோக்கி ஓடிப்போனார்கள்.
2 இராஜாக்கள் 25 : 5 (TOV)
கல்தேயரின் இராணுவத்தார் ராஜாவைப் பின்தொடர்ந்து எரிகோவின் சமனான பூமியில் அவனைப் பிடித்தார்கள்; அப்பொழுது அவனுடைய இராணுவமெல்லாம் அவனை விட்டுச் சிதறிப்போயிற்று.
2 இராஜாக்கள் 25 : 6 (TOV)
அவர்கள் ராஜாவைப் பிடித்து, அவனை ரிப்லாவிலிருக்கிற பாபிலோன் ராஜாவினிடத்துக்குக் கொண்டுபோய், அவனை நியாயந்தீர்த்து,
2 இராஜாக்கள் 25 : 7 (TOV)
சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டி, சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப் போட்டு, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.
2 இராஜாக்கள் 25 : 8 (TOV)
ஐந்தாம் மாதம் ஏழாந்தேதியிலே நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவின் பத்தொன்பதாம் வருஷத்திலே, பாபிலோன் ராஜாவின் ஊழியக்காரனாகிய நெபுசராதான் என்னும் காவல் சேனாபதி எருசலேமுக்கு வந்து,
2 இராஜாக்கள் 25 : 9 (TOV)
கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமின் சகல கட்டடங்களையும், பெரிய வீடுகள் எல்லாவற்றையும் அக்கினியால் சுட்டெரித்துவிட்டான்.
2 இராஜாக்கள் 25 : 10 (TOV)
காவல் சேனாபதியோடிருந்த கல்தேயரின் இராணுவத்தாரெல்லாரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த அலங்கங்களை இடித்துப்போட்டார்கள்.
2 இராஜாக்கள் 25 : 11 (TOV)
நகரத்தில் மீதியான மற்ற ஜனத்தையும், பாபிலோன் ராஜாவின் வசமாக ஓடிவந்துவிட்டவர்களையும், மற்ற ஜனக்கூட்டத்தையும், காவல் சேனாபதியாகிய நெபுசராதான் சிறைகளாகக் கொண்டுபோனான்.
2 இராஜாக்கள் 25 : 12 (TOV)
தேசத்தில் ஏழையான சிலரைத் திராட்சத்தோட்டக்காரராகவும் பயிரிடுங்குடிகளாகவும் விட்டிருந்தான்.
2 இராஜாக்கள் 25 : 13 (TOV)
கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், அதிலிருந்த ஆதாரங்களையும், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலக் கடல்தொட்டியையும், கல்தேயர் உடைத்துப்போட்டு, அவைகளின் வெண்கலத்தைப் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டுபோனார்கள்.
2 இராஜாக்கள் 25 : 14 (TOV)
செப்புச்சட்டிகளையும், சாம்பல் பாத்திரங்களையும், கத்திகளையும், தூபகலசங்களையும், ஆராதனைக்கடுத்த சகல வெண்கலப் பணிமுட்டுகளையும் எடுத்துக்கொண்டார்கள்.
2 இராஜாக்கள் 25 : 15 (TOV)
சுத்தப் பொன்னும் சுத்த வெள்ளியுமான தூபகலசங்களையும் கலங்களையும் காவல் சேனாபதி எடுத்துக்கொண்டான்.
2 இராஜாக்கள் 25 : 16 (TOV)
சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்துக்காகப் பண்ணுவித்த இரண்டு தூண்களும், ஒரு கடல்தொட்டியும் ஆதாரங்களுமாகிய அந்தச் சகல பணிமுட்டுகளுடைய வெண்கலத்திற்கும் நிறையில்லை.
2 இராஜாக்கள் 25 : 17 (TOV)
ஒரு தூணின் உயரம் பதினெட்டு முழமாயிருந்தது; அதின்மேல் அதற்கு மூன்றுமுழ உயரமான வெண்கலத் தலைப்பும் உண்டாயிருந்தது; குமிழிலே சுற்றிலும் செய்யப்பட்டிருந்த பின்னலும் மாதளம்பழங்களும் எல்லாம் வெண்கலமாயிருந்தது; மற்றத் தூணும் அதின் பின்னலும் அதைப்போல் இருந்தது.
2 இராஜாக்கள் 25 : 18 (TOV)
காவல் சேனாபதி பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசல்காக்கும் மூன்று காவற்காரரையும் பிடித்தான்.
2 இராஜாக்கள் 25 : 19 (TOV)
நகரத்திலே அவன் யுத்தமனுஷரின் விசாரிப்புக்காரனாகிய பிரதானி ஒருவனையும், ராஜாவின் மந்திரிகளிலே நகரத்தில் அகப்பட்ட ஐந்துபேரையும், தேசத்தின் ஜனத்தைச் சேவகம் எழுதுகிற தலைவனான இராணுவச்சம்பிரதியையும், தேசஜனத்திலே நகரத்தில் அகப்பட்ட அறுபதுபேரையும் பிடித்தான்.
2 இராஜாக்கள் 25 : 20 (TOV)
அவர்களைக் காவல் சேனாபதியாகிய நெபுசராதான் பிடித்து, ரிப்லாவில் இருக்கிற பாபிலோன் ராஜாவினிடத்துக்குக் கொண்டுபோனான்.
2 இராஜாக்கள் 25 : 21 (TOV)
அவர்களைப் பாபிலோன் ராஜா ஆமாத் தேசத்தின் பட்டணமான ரிப்லாவிலே வெட்டிக் கொன்றுபோட்டான்; இப்படியே யூதா ஜனங்கள் தங்கள் தேசத்திலிருந்து சிறையிருப்புக்குக் கொண்டுபோகப்பட்டார்கள்.
2 இராஜாக்கள் 25 : 22 (TOV)
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யூதேயாதேசத்தில் மீதியாக வைத்த ஜனத்தின்மேல், சாப்பானின் குமாரனாகிய அகீக்காமின் மகன் கெதலியாவை அதிகாரியாக வைத்தான்.
2 இராஜாக்கள் 25 : 23 (TOV)
பாபிலோன் ராஜா கெதலியாவை அதிகாரியாக வைத்ததை, சகல இராணுவச் சேர்வைக்காரரும் அவர்களுடைய மனுஷரும் கேட்டபோது, அவர்கள் மிஸ்பாவில் இருக்கிற கெதலியாவினிடத்தில் வந்தார்கள்; அவர்கள் யாரெனில், நெத்தனியாவின் குமாரன் இஸ்மவேலும், கரேயாவின் குமாரன் யோகனானும், நெத்தோப்பாத்தியனாகிய தன்கூமேத்தின் குமாரன் செராயாவும், மாகாத்தியனான ஒருவனுடைய குமாரன் யசனியாவும் அவர்கள் மனுஷருமே.
2 இராஜாக்கள் 25 : 24 (TOV)
அப்பொழுது கெதலியா அவர்களுக்கும் அவர்கள் மனுஷருக்கும் ஆணையிட்டு: நீங்கள் கல்தேயரைச் சேவிக்கப் பயப்படவேண்டாம்; தேசத்திலிருந்து பாபிலோன் ராஜாவைச் சேவியுங்கள்; அப்பொழுது உங்களுக்கு நன்மை உண்டாகும் என்றான்.
2 இராஜாக்கள் 25 : 25 (TOV)
ஏழாம் மாதத்திலே, ராஜவம்சத்திலே பிறந்த எலிசாமாவின் குமாரனாகிய நெத்தனியாவின் குமாரன் இஸ்மவேல் பத்து மனுஷரோடேகூட வந்து, கெதலியாவையும், அவனோடே மிஸ்பாவிலிருந்த யூதரையும், கல்தேயரையும் வெட்டிக் கொன்றுபோட்டான்.
2 இராஜாக்கள் 25 : 26 (TOV)
அப்பொழுது சிறியோரும் பெரியோருமாகிய ஜனங்கள் யாவரும் சேனாபதிகளும் கல்தேயருக்குப் பயந்ததினாலே எழுந்து புறப்பட்டு எகிப்திற்குப் போனார்கள்.
2 இராஜாக்கள் 25 : 27 (TOV)
யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தேழாந்தேதியிலே, ஏவில் மெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து புறப்படப்பண்ணி, அவன் தலையை உயர்த்தி,
2 இராஜாக்கள் 25 : 28 (TOV)
அவனோடே அன்பாய்ப் பேசி, அவனுடைய சிங்காசனத்தைத் தன்னோடே பாபிலோனிலிருந்த ராஜாக்களின் சிங்காசனங்களுக்கு உயரமாக வைத்து,
2 இராஜாக்கள் 25 : 29 (TOV)
அவனுடைய சிறைச்சாலை வஸ்திரங்களை மாற்றினான்; அவன் உயிரோடிருந்த சகல நாளும் நித்தம் தனக்கு முன்பாகப் போஜனம்பண்ணும்படி செய்தான்.
2 இராஜாக்கள் 25 : 30 (TOV)
அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனுடைய செலவுக்காக, ராஜாவினால் கட்டளையான அனுதினத் திட்டத்தின்படி, அனுதினமும் கொடுக்கப்பட்டுவந்தது.
❮
❯